Monday, July 6, 2009
கட்டுண்டு கிடக்கும் காலச்சக்கரம் தன்னியக்கம் பெறுக.
கண்கள் சிவப்பேறிக் கிடக்கின்றன.
அழுகின்றேனா? அனல்கின்றேனா?
விழியோடையில் உலர்ந்த
திரவத்தின் சாட்சியமாக
இமையோரத்தில் பிசுபிசுப்பு.
பிம்பங்களற்ற எழுதுகோல் நட்பின்
கவிதைப் பேச்சும்,
தோழமைக் கடிகளும்
இருண்ட துயருக்குள்…
எழுதும்போதே எண்ணங்கள் தோற்கின்றன
மீளாத் துயரின் வடுக்களாக
ஒளித்தெறிப்புகள் மங்கிக் கலங்குகின்றன.
எல்லையற்ற கற்பனை வெளிகள்
வெறுமைப்பட்டதாய்
ஆங்காங்கே சுமைதாங்கிகளின்
படிமங்களாய்….
உன்னில், என்னில் ஆழப்படிந்து,
உயிர்ப்பின் மூச்சுவரை உட்கார்ந்து விட்டன.
வானம்பாடிகள் ஊமையான
வரலாறு ஒன்று தோற்றம் கொண்டுள்ளது.
பிராணவாயு இல்லாவிடத்தில்
காகித மலர்கள் அழகு செய்கின்றன.
கைகள் குலுக்கிக் கவிதை பேச,
தோளைத் தட்டித் தோழமை உரைக்க
முயன்றும் முடியவில்லை.
நண்பனே!
என் கற்பனைத் தேர்
கல்லாய் கிடக்கிறது.
Subscribe to:
Posts (Atom)