Thursday, April 10, 2008

என் இருப்பும், உன் இருப்பும் அவசியம்

பருத்த கலசங்களும்,
பெருத்த தம்புராவுமே
நட்பை நிலைப்படுத்தும்
நிர்வாண நிலையென்றால்
கரிக்கிறது கண்மணிகள்.
உறுத்தலின்றி தரித்த விசம்போல்
ஒரு பேராற்றில் கலக்கும் துளிகளில்
மாள்வது நட்பாகில்....
மானுடம் சிகிலமாகி,
நாகரீக வெளிகளெல்லாம்
நரகல் புவியாகி,
சீழ் பிடித்து மணக்கும்.

என்னிருப்பும், உன்னிருப்பும் அவசியம்.
நட்பென்ற உன்னதத்தின்
மேன்மையைப் புரிய வைக்க
நண்பா!......
என்னிருப்பும், உன்னிருப்பும் அவசியம்.

Tuesday, April 8, 2008

எந்தப் புள்ளியில் இருந்து விரிந்தோம்?

அந்தப் புள்ளியே அகம் புறமாக்கும்.
அந்தப் புள்ளியே இணைக்கும் பிரிக்கும்.
அந்தப் புள்ளியே பிறப்பும் இறப்பும்.
அந்தப் புள்ளியே ஆன்ம தாகம்.
அந்தப் புள்ளியே ஆத்மாவின் ராகம்.

அனைத்தும் உணர்த்தியது நட்பு

படிமப்பாறைகளின் தகர்ப்பு
முறுவலுக்கான முகவரி
இயல்புக்கான உள ஓய்வு
எழுத்திற்கான வனப்பு
அனைத்தும் உணர்த்தியது நட்பு

நட்பின் வரிகள்

என்னை எனக்குணர்த்திய நட்பைப்பற்றி, என் தோழமையின் அழகு பற்றி மைத்துளிகளின் ஈரகசிவு இந்தப் பதிப்பு.தொடர் கவிதையல்ல, குறுங்கவிதைக் குறிப்பாக, குவிப்பாக நேரங் கிடைக்கும் போதெல்லாம் இங்கு நட்பின் வரிகளாக இந்த மனக்கூடு சுமக்கும்.